

மேற்குவங்கத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநரை சூழ்ந்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் இன்று வந்தார். பல்கலைக்ழக வளாகத்துக்கு காரில் வந்த அவரை மாணவர்கள் கறுப்புக்கொடியுடன் சூழ்ந்து கொண்டு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பினர். மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் எதிராக குரல் எழுப்பின்ர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வந்து மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.