Last Updated : 24 Dec, 2019 10:14 AM

 

Published : 24 Dec 2019 10:14 AM
Last Updated : 24 Dec 2019 10:14 AM

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மிரட்டல்: பாஜக எம்.பி. புகார்

திரிபுரா பாஜக எம்.பி. ரேபதி குமார் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து தடை செய்யப்பட்ட திரிபுரா தேசிய விடுதலை முன்னணி அமைப்பிடமிருந்து தனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் ரிசர்வ் தொகுதியான கிழக்கு திரிபுரா தொகுதி எம்.பி.யாவார் ரேபதி குமார். இவர் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து இதற்கான கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று தடை செய்யப்பட்ட அமைப்பிடமிருந்து மிரட்டல் கடிதம் ஒன்று 5 நாட்களுக்கு முன்பாக வந்ததாக கவலை தெரிவித்துள்ளார்.

“பழங்குடி நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று எனக்கு மிரட்டல் அனுப்பியுள்ளனர். நான் பாஜக எம்.பி. கட்சிக் கொறடாவை மீறி நான் செயல்பட்டால் அதன் விளைவுகள் என்னவென்பதையும் பலரும் அறிவர்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரேபதி குமார் முதல் முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதோடு முக்கிய பழங்குடியினத் தலைவராகக் கருதப்படுபவர், குடிஉரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பழங்குடியினர் சிறுபான்மைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற கவலை உண்மையானதே என்ரு கூறும் ரேபதி குமார், இந்தச் சட்டத்தினால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

1947ம் ஆண்டு பிரிவினையின் போது அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களான இந்தப் பழங்குடியினர் சிறுபான்மையினராகக் குறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் திரிபுரா பழங்குடியினர் பகுதிகளின் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் என்பது இந்தப் பழங்குடியினர் நலன்களைக் காக்க 1980களில் உருவானதுதான். மாநிலத்தின் கணிக்கப்பட்ட 40 லட்சம் பேர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தப் பழங்குடியினர் ஆவார்கள்.

இந்நிலையில் ரேபதி குமார் கூறும்போது, “சட்டவிரோத குடியேற்றத்தை இனியும் அனுமதிக்க முடியாது. கடந்த 70 ஆண்டுகளாக மாநிலத்திற்கு வரும் குடியேறிகள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தெளிவாக 6-வது சட்டப்பிரிவுக்கு இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாநில பழங்குடியினர் நலன்கள் இந்த சட்டத்தினால் காக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்” என்றார்.

தற்போதைய மிரட்டல் கவலைக்குரியதா என்ற கேள்விக்கு ரேபதி குமார் கூறும்போது, “இது நிச்சயம் கவலையளிக்கக் கூடியதே, ஏனெனில் அந்த தடைச் செய்யப்பட்ட அமைப்பின் கடந்த கால வன்முறையான செயல்களை மக்கள் நன்கு அறிவர். நான் இந்த மிரட்டலை மாநில உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பார்வைக்குக் கொண்டு செல்லவிருக்கிறேன்” என்றார்.

இந்த மிரட்டல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், இந்த அமைப்பு பல பிளவுகளுக்குப் பிறகே வலுவிழுந்து விட்டது என்றும், வங்கதேசத்திலிருந்து செயல்படும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் சரணடைந்து விட்டனர், வங்கதேச ராணுவத்தினரும், போலீஸாரும் சிட்டகாங் மலைப்பகுதியில் முகாமிட்டிருக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x