

சூரிய கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 13 மணி நேரம் சாத்தப்பட உள்ளது. ஆனால், காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும் கிரகண கால பூஜைக்காக திறந்திருக்கும்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 26-ம் தேதி காலை 8.08 மணிக்கு தொடங்கி, 11.16 மணி வரை நீடிக்க உள்ளது. இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருச்சானூர் பத்மா வதி தாயார் கோயில், கோதண்ட ராமர் கோயில், கபிலேஷ்வரர் கோயில், கல்யாண வெங்கடேஸ் வரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களும் 25-ம் தேதி இரவு முதல் 26-ம் தேதி மதியம் 12 மணி வரை நடை அடைக்கப்பட உள்ளது.
இதில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 25-ம் தேதி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு, 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனால் தொடர்ந்து 13 மணி நேரம் ஏழுமலையான் கோயில் மூடப்பட்டிருக்கும். அதன் பின்னர் ஆகம சாஸ்திர விதிகளின் படி, கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சூரிய கிரகணத்தால், 26-ம் தேதி திருமலையில் வழக்கமாக நடைபெறும் திருப்பாவாடை சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்தோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப் படுவதாக தேவஸ்தானம் அறிவித் துள்ளது.
ஆனால், பஞ்ச பூத திருத்தலங்களில் வாயு தலமாக கருதப்படும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மட்டும் 26-ம் தேதி திறந்தே இருக்கும். அன்றைய தினம், காலையில் கிரகண நேரத் தில், மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் நடைபெற உள்ளது. மூலவ ருக்கு நவகிரக கவசம் உள்ளதால், இக்கோயில் சூரிய, சந்திர கிரக ணங்களின் போதும் நடை சாத்தப் படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சொர்க்க வாசல் திறக்கப்படும்.