Published : 24 Dec 2019 07:17 AM
Last Updated : 24 Dec 2019 07:17 AM

ஜார்க்கண்டின் 5-வது முதல்வராகும் ஹேமந்த் சோரன்: குடும்பம், கட்சி, கூட்டணியை ஒன்றிணைத்ததால் கிடைத்த வெற்றி

ஜார்க்கண்டின் ஐந்தாவது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன்(44) பதவி ஏற்க உள்ளார். அவர் தனது குடும்பம், கட்சி மற்றும் கூட்டணியை ஒன்றிணைத்திருப்பதால் இந்த வெற்றியை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பிஹாரில் இருந்து புதிய மாநிலமாகப் 2000-ம் ஆண்டில் பிரிந்த ஜார்க்கண்டின் முக்கிய கட்சியாக இருந்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. இதன் நிறுவனரான சிபு சோரன், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தார். அதில் ஒருமுறை கூட முழுவதுமாக ஐந்து வருடங்களுக்கு அவரால் ஆட்சி செய்ய முடியவில்லை. சிபுவின் இரண்டாவது மகனான ஹேமந்த் சோரன் 2000-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். இவர் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு பாரம்பரிய தொகுதியான தும்காவில் தோல்வி அடைந்தார்.

2009-ல் தனது மூத்த சகோதரரும் எம்எல்ஏவுமான துர்கா சோரனின் திடீர் மறைவினால் சிபு குடும்பத்தினர் இடையே மோதல் எழுந்தது. சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில், ஜேஎம்எம் கட்சி உடையும் அளவுக்கு போனது. இதை தடுத்து கட்சியை மீட்க முக்கிய பங்காற்றினார் ஹேமந்த். தனது குடும்ப உறுப்பினர்களிடம் பேசி அனைவரையும் சமாதானப்படுத்தினார். தனது இளைய சகோதரரான பஸந்த் சோரனை ஜேஎம்எம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக்கினார். மூத்த சகோதரர் துர்காவின் ஜமா தொகுதியில் தனது மனைவி சீதா சோரனை போட்டியிட வைத்து எம்எல்ஏவாக்கினார் ஹேமந்த்.

மீண்டும் தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்வானார்.

இந்த 2009 தேர்தலில் முதல்வர் அர்ஜுன் முண்டா தலைமையில் அமைந்த பாஜக-ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராகும் வாய்ப்பும் ஹேமந்துக்கு கிடைத்தது. இந்த ஆதரவை 2013-ல் ஜேஎம்எம் வாபஸ் பெற்றதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி மூன்றாவது முறையாக அங்கு அமலானது. பிறகு சில மாதங்களில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்த ஹேமந்த் முதன்முறையாக ஜார்க்கண்ட் மாநில முதல்வரானார்.

38-வது வயதில் முதல்வரான ஹேமந்த் அப்போது நாட்டின் இளம் முதல்வர் என்ற பெருமையைப் பெற்று இருந்தார். 17 மாத ஆட்சியில் ஹேமந்த், சில முற்போக்கு திட்டங்களை அமலாக்கி புகழ்பெற்றார். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியதுடன், நக்சலைட்டுகள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி இருந்தார். மேலும் கனிமவளம் மிகுந்த ஜார்க்கண்டின் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டது ஹேமந்துக்கு பலனளித்தது.

எனினும், தொகுதி பங்கீடு பிரச்சனையால் மீண்டும் கூட்டணி அமைக்க முடியாமல், 2014-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம் தனியாகப் போட்டியிட்டது. இதில், வெறும் 19 தொகுதி வெற்றியுடன் ஹேமந்த் இரண்டாவது முறையாக தும்காவில் தோல்வி அடைந்தார். எனினும், மற்றொரு தொகுதியான பர்ஹாட்டில் அவர் போட்டியிருந்தார்.

பர்ஹாட் தொகுதியில் கிடைத்த வெற்றியால் அவர் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்நிலையில், கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் தன் தந்தை சிபு சோரன் அமர்த்திய பல முக்கிய நிர்வாகிகளை மாற்றினார். கிராமந்தோறும் நேரில் சென்று கட்சியை வலுப்படுத்தினார். இதையடுத்து, 2019 தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவிடம் பேசினார் ஹேமந்த். இதில், அவரது தலைமையில் போட்டியிட்ட மெகா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனினும், மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி பாஜகவிடம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x