

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவிரப் போராட்டம் தொடர்கிறது. இதில் காவல் நிலையங்கள் மீது கல்லெறிபவர்களின் கை, கால்களை முறிக்காத போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என பிஜ்னோரின் ஐபிஎஸ் அதிகாரி சர்ச்சை உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது பிஜ்னோர் மாவட்டம். இதன் காவல்துறைக் கண்காணிப்பாளராக (எஸ்பி) இருப்பவர் சஞ்சீவ் தியாகி எனும் ஐபிஎஸ் அதிகாரி.
பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் குடியுரிமைச் சட்டத்திற்கான போராட்டம் தொடங்கி தீவிரமானது. இதில் அனஸ் (21), முகம்மது சுலைமான் (21) ஆகிய இருவரும் துப்பாக்கிக் குண்டுகள் பட்டு பலியாகினர்.
கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இந்தக் கலவரங்களில் இதுவரை 131 பேர் கைதாகியுள்ளனர். இவர்களில் 122 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பிஜ்னோரின் எஸ்.பி.யான சஞ்சீவ் தியாகி தனது மாவட்ட போலீஸாருக்கு வயர்லெஸ் கருவியில் பேசி, சில உத்தரவுகளை இட்டிருந்தார். இந்தப் பேச்சு பதிவாகி, வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதிவில் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் தியாகி பேசுகையில், ''குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வதந்தியின் பெயரில் நடத்தும் போராட்டம் சட்டவிரோதமானது. இதன் மீது முதல்வர் (யோகி அதித்யநாத்) கூட்டத்தில் கடுமையான உத்தரவுகள் இடப்பட்டுள்ளன.
எனவே, போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம். இவர்களில் போலீஸார் மீது தடியடி, கல்லெறி உள்ளிட்ட தாக்குதல் நடத்துபவர்களை எதிர்க்க முடியாத அளவிற்கா உ.பி. காவல்துறை உள்ளது? இவர்களின் கை, கால்கள் முறிக்கப்படாதது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் எஸ்.பி.யான சஞ்சீவ் தியாகி தன் மாவட்டத்தில் நிகழ்ந்த கலவரத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய போலீஸாருக்குப் பாராட்டையும் தெரிவித்துள்ளார். இத்துடன் அவர் தம் போலீஸாருக்கு அளித்த எச்சரிக்கை சர்ச்சையாகி உள்ளது.
இது குறித்து சஞ்சீவ் தியாகி கூறும்போது, ''போட்டோ, வீடியோ எடுக்கப்பட்டாலும் கவலைப்படாமல் நீங்கள் எடுக்கும் எதிர் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கப்படும். கண்டிப்பான உத்தரவின்படி நீங்கள் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதற்கான முழுப் பாதுகாப்பு உங்களுக்கு அளிக்கப்படும்.
இதில் போராட்டக்காரர்களுக்கு தடியடி நடத்தி பாடம் கற்பித்து அவர்களின் புத்தியைச் சீராக்க வேண்டும். உங்களை எதிர்க்க எவருக்கும் தைரியம் வரக்கூடாது. இவர்களால் எந்த காவல் நிலையத்திலும் ஒரு கல்லாவது எறிபவரின் கை, கால்கள் உடைக்கப்படாவிட்டால் நேரடியாக அதன் ஆய்வாளர் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்'' என எச்சரித்துள்ளார்.
கலவரக்காரர்களில் எவரும் போராட்டத்தின் பெயரில் பொதுச் சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும், அவ்வாறு செய்பவர்கள் அதற்கான விளைவைச் சந்திக்க வைக்கவும் எஸ்.பி. சஞ்சீவ் தியாகி அறிவுறுத்தியுள்ளார். இந்த சமயங்களில் எவரும் தம் துப்பாக்கிகள், பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்டவற்றைப் பறிக்காமலும் ஜாக்கிரதையாக இருக்கவும் போலீஸாரை ஐபிஎஸ் அதிகாரி எச்சரித்துள்ளார்.
நேரில் வருத்தம் தெரிவித்த பிரியங்கா
இதனிடையே, கலவரத்தில் பலியான அனஸ் மற்றும் சுலைமான் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். இவரது வரவு குறித்து நேற்று பத்திரிகையாளர் மற்றும் காவல்துறை என எவருக்கும் கூறாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் முன்கூட்டியே வெளியானால் அவர் பிஜ்னோர் மாவட்டத்துக்குள் நுழைய பாஜக ஆளும் உ.பி. அரசு அனுமதிக்காது என அஞ்சப்பட்டது காரணம் ஆகும். ''ஏழைகளிடமும், கூலி வேலை செய்பவர்களிடமும் குடியிருப்பு ஆதாரம் கேட்டால் அவர்களால் எப்படி அளிக்க முடியும்?'' என பிரியங்கா அரசிடம் கேள்வி எழுப்பினார்.