Last Updated : 23 Dec, 2019 08:04 PM

 

Published : 23 Dec 2019 08:04 PM
Last Updated : 23 Dec 2019 08:04 PM

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து; மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் - அமித் ஷா

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.

இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கூட்டணி 47 இடங்களில் முன்னிலையும், பாஜக 25 இடங்களிலும், ஜேவிஎம் கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பாஜக 10 தொகுதிகளில் வென்றுள்ளதாகவும்,16 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 12 இடங்களில் வெற்றியும்,18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றியும், 9 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் அடுத்து ஹேமந்த் சோரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா, ஹேரத் ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார்.

ஹேமந்த் சோரன் வெற்றிக்குப் பிரமதர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், "பாஜக தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றும். மக்கள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள். மாநிலத்துக்குச் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள். பல ஆண்டுகளாக ஜார்க்கண்டில் பாஜக மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் கூறுகையில், " ஜார்க்கண்ட் மக்கள் அளித்த முடிவை பாஜக மதிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் பணியாற்ற பாஜகவுக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து மாநில வளர்ச்சிக்கு பாஜக பணியாற்றும். சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றிய தொண்டர்களுக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ரகுபர் தாஸ், தோல்விக்கு முழுப் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் ரகுபர் தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு முழுமையாக நான் பொறுப்பேற்கிறேன். இது கட்சிக்கான தோல்வி அல்ல, என்னுடைய தோல்வி. மக்களின் தீர்ப்பை பாஜக மதிக்கிறது. தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x