

மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு மக்களிடையே இருந்துவருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசும் குடியுரிமைச் சட்டத்துக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் 3 முறை பேரணி நடந்தது. மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க அரசே அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்து அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தது.
மேற்கு வங்க அரசு மக்களின் வரிப்பணத்தில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறது, சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி பொதுநல மனுக்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டிபிஎன் ராதாகிருஷ்ணன், நீதிபதி அர்ஜித் பானர்ஜி முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன், "குடியுரிமைச் சட்டம் தொடர்பாகவும், அதற்கு எதிராகவும் மேற்கு வங்க அரசு செய்து வரும் அனைத்து விளம்பரங்கையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும்வரை விளம்பரம் ஏதும் அரசு சார்பில் செய்யக்கூடாது'' என்று உத்தரவிட்டார்.
மேற்கு வங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிஷோர் தத்தா ஆஜராகி வாதிடுகையில், "மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை. நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இணையதள இணைப்பும் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டுவிட்டது" எனத் தெரிவித்தார்.
ஆனால், தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் அமர்வு அதை ஏற்கவில்லை, மாறாக, "போராட்டத்தில் ஏராளமான பொதுச்சொத்துகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன என்று மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், ரயில்வே துறைக்கு ஏற்பட்ட சேதங்கள், மதிப்பீடுகள் குறித்தும், சேதம் விளைவித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும்'' என்று கூறி வழக்கை 2020-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.