Last Updated : 23 Dec, 2019 02:44 PM

 

Published : 23 Dec 2019 02:44 PM
Last Updated : 23 Dec 2019 02:44 PM

என்ஆர்சி விவகாரம்; பாஜக தேசத்தையை முட்டாளாக்க முயல்கிறது: பிரதமர் மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஒருபோதும் ஆலோசிக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியது, நாட்டையே முட்டாளாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, " தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதுகுறித்து விவாதிக்கவே இல்லை. மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ விவாதிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடியின் பேச்சுக்காகத்தான் தேசம் காத்திருந்தது. குடியுரிமைச் சட்டத்தால் ஏற்கெனவே நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவுகையில், முதல் முறையாக நீங்கள் வெறுப்பையும், பொய்களையும் கலந்து பேசியது வருத்தமாக இருக்கிறது. பிரிப்பதில் தலைவரான உங்களிடம் இதைத் தவிர எதை எதிர்பார்க்க முடியும்" எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது சுர்ஜேவாலா பேசுகையில், " பிரதமர் மோடி டெல்லியில் நேற்று பேசும்போது என்ஆர்சி குறித்து விவாதமே நடத்தவில்லை என்றார். ஆனால், ஜார்க்கண்ட் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 28-ம் தேதி வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் என்ஆர்சி கொண்டு வரப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இரு விஷயங்களுக்கு விளக்கம் கொடுங்கள். பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சருக்கும் ஒற்றுமை இல்லையா? இருவருக்கும் அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பகிர்வதில் பிரச்சினை இருக்கிறதா அல்லது இருவரும் சேர்ந்து மக்களை முட்டாளாக்குகிறீர்களா?

பிரதமர் மோடி டெல்லியில் என்ஆர்சி வராது. தடுப்பு முகாம்கள் இல்லை என்று பேசியுள்ளார். ஆனால், மேற்கு வங்கத்துக்கு அமித் ஷா சென்றபோது, என்ஆர்சி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பேசியுள்ளார். எவ்வளவுதான் உங்களால் தேசத்தை ஏமாற்ற முடியும். மக்களவையில் 1,133 பேர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது" என்று சுர்ஜேவாலா பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், "பிரதமர் மோடி ஒன்று பேசுகிறார், உள்துறை அமைச்சர் அமித்ஷா அதை மாற்றிப் பேசுகிறார். யாரும் மக்களை முட்டாளாக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x