Last Updated : 23 Dec, 2019 02:57 PM

 

Published : 23 Dec 2019 02:57 PM
Last Updated : 23 Dec 2019 02:57 PM

அமிதாப் பச்சனுக்கு வரும் 29-ம் தேதி தாதா சாகேப் பால்கே விருது: ஜவடேகர் அறிவிப்பு

இந்திய அரசு திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வரும் 29-ம் தேதி அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்தார்.

புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தேசிய அளவில் வெற்றி பெற்ற கீர்த்தி சுரேஷ், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட இந்தியத் திரைநட்சத்திரங்கள் மற்றும் சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இன்று நடைபெற்ற விழாவில் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையின் உச்சபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உடல்நலம் குன்றியதால் அமிதாப் விழாவில் பங்கேற்கவில்லை.

77 வயதான பச்சன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவிற்குச் செல்ல வேண்டாம் என்றும், பயணத்தைத் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அமிதாப் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ட்விட்டரில், “காய்ச்சலுடன் இருக்கிறேன் ..! பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை .. நாளை டெல்லியில் நடைபெறும் தேசிய விருது விழாவுக்கு வர முடியாது .. மிகவும் துரதிர்ஷ்டவசமானது .. என் வருத்தம் .. ” எனப் பதிவிட்டிருந்தார்.

விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ''விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து வெற்றியாளர்களுக்கும் ராஷ்டிரபதி பவனில் உயர் தேநீர் விருந்து அளிப்பார்.

உடல்நலக்குறைவு காரணமாக விழாவுக்கு வர இயலாத அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வரும் 29-ம் தேதி வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x