Last Updated : 23 Dec, 2019 12:47 PM

 

Published : 23 Dec 2019 12:47 PM
Last Updated : 23 Dec 2019 12:47 PM

ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி? மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்; பாஜக நம்பிக்கை

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துள்ளதால், அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் வரக்கூடும் எனத் தெரிகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 50 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும், பாஜக ஆட்சியை இழக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தன.

இன்று காலை 8 மணியில் இருந்து 24 மாவட்டங்களின் தலைநகரங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி இதுவரை 43 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கச் சாத்தியங்கள் உள்ளன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் நிர்வாகிகள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

பாஜக 27 இடங்களில் முன்னிலையும், ஏஜேஎஸ்யு கட்சி 3 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

முன்னிலை நிலவரம்

பாக்மரா, பவநாத்பூர், தால்டான்காஞ்ச், தான்பாத், தும்கா, காண்டே, காட்சிலா, ஹதியா, ஹசாரிபாக், ஜமா, ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு, ஜமுவா, ஜார்முன்டி, கான்கே, குந்தி, மதுப்பூர், மககாமா, போட்கா, ராம்கார்க், ராஜ்மஹால் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். ராஞ்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிபி சிங் முன்னிலை பெற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பகாராகோரா, போரியோ, சாய்பாஷா, சக்ராதார்பூர், தும்ரி, காட்சிலா, கார்வாக், இச்சாகார்க், ஜக்சாலை, காரஸ்வான்,லேட்கர், லிட்டிபாரா, மனோகர்பூர், சரைகேளா, மகேஷ்பூர் ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி பார்க்காகோன், பார்கி, பகூர், பெர்மோ, ஜெகந்நாத்பூர், கோலேபேரா, மணிகா, பொகாரா உள்ளிட்ட தொகுதிகளிலும் தியோகார், சதாரா, கோதார்மா, சத்தார்பூர், கோடா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.

எந்தக் கட்சியும் தீண்டத்தகாதவை அல்ல

இதற்கிடையே ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபுலால் மாரண்டி இன்று ராஞ்சியில் நிருபர்களிடம் கூறுகையில், "அரசியலில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சியல்ல. ஆதலால், தேர்தல் முடிவுகள் வரட்டும். மக்கள் யாருக்குத் தீர்ப்பளித்துள்ளனர் என்பதைப் பொறுத்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தீவிர உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவர் பாபுலால் மாரண்டி. அதன்பின் பாஜகவில் இருந்து பிரிந்து தனியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைத் தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஜேவிஎம் கட்சி இந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் தேவைப்பட்டால் கூட்டணி வைக்கவும் தயங்காது என்பதை சூசகமாகவே மாரண்டி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சி அமைப்போம்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், தும்கா, பர்ஹெய்த் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் தும்கா தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான லூயிஸ் மாரண்டி முன்னிலை பெற்றுள்ளார். ஹேமந்த் சோரன் 8 ஆயிரம் வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். ஆனால், பர்ஹெய்த் தொகுதியில் ஹேமந்த் சோரன் முன்னிலையுடன் உள்ளார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் முழுவதும் வருவதற்கு முன்பே எதையும் ஊகிப்பது தவறு என்று பாஜக தெரிவித்துள்ளது. முதல்வர் ரகுபர் தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், "ஜார்க்கண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும். தொடக்கத்தில் வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக முடிவுகள் செல்லலாம். ஆனால், பாஜக ஆட்சிதான் மீண்டும் அமையும்.

காங்கிரஸ் கூட்டணியும், பாஜகவும் கடும் போட்டியுடன் குறைவான இடங்களில்தான் முன்னிலையில் இருக்கின்றன. எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம். இது 3-வது சுற்றுதான். பாஜக வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x