Last Updated : 23 Dec, 2019 11:48 AM

 

Published : 23 Dec 2019 11:48 AM
Last Updated : 23 Dec 2019 11:48 AM

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பாபுலால் மாரண்டி, சுரேஷ் மாத்தோ கிங் மேக்கராக உருவாவார்களா?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (ஜேவிஎம்), அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் அமைப்பு (ஏஜேஎஸ்யு) கட்சிகள் கிங் மேக்கராக உருவாகும் என்று தெரியவருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவேளை காங்கிரஸ் கூட்டணிக்கும் , பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாபுலால் மாரண்டியி்ன் ஜேவிஎம், சுரேஷ் மாத்தோவின் ஏஜேஎஸ்யு கட்சிகள்தான் கிங் மேக்கராக உருவாகும் எனத் தெரிகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே 50 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும், பாஜக ஆட்சியை இழக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தன.

இன்று காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி இதுவரை 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் ஆளும் பாஜக 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றுக் கடந்த 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 14 தொகுதிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம் சிறிய கட்சிகளான பாபுலால் மாரண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும், சுரேஷ் மாத்தோவின் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தற்போதுள்ள சூழல் தொடர்ந்து காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பாஜக தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்க ஜேவிஎம், ஏஜேஎஸ்யு கட்சிகளுடன் முயலும். இதில் பாபுலால் மாரண்டி ஏற்கெனவே பாஜகவில் இருந்து பிரிந்தவர்தான் என்பதால், பாஜகவுடன் சேர்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆதலால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாபுலால் மாரண்டி, சுரேஷ் மாத்தோ இருவரும் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக உருவெடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x