ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னிலையால் பாஜக அதிர்ச்சி 

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னிலையால் பாஜக அதிர்ச்சி 
Updated on
1 min read

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்ட தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில், காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கூட்டணிக்குக் கிடைக்கும் முன்னிலையால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள தொகுதிகள் 81. இதில் ஆட்சி அமைக்க 41 தொகுதிகள் தேவை. இதற்காக, அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட 1,215 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களுக்காக ஐந்து கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் ஜார்க்கண்டின் 24 இடங்களில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தொங்கு சபைக்கான சூழல் இருந்தது.

பிறகு, காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜேம் எம் எம்- காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இங்கு ஆளும் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் தெரிகின்றன.

கட்சி வாரியான முன்னிலை நிலவரத்தில் ஜேஎம்எம் 22, காங்கிரஸ் 11, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, பகுஜன் சமாஜ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனின் பிரிவு 1, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கட்சி 3, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் இதர கட்சிகள் தலா 4 உள்ளன.

இது குறித்து பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடியின் முக்கியத் தலைவருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கூறும்போது, ''ஜேஎம்எம் தலைமையிலான எங்களது மெகா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க உள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவி வகிப்பார்'' எனத் தெரிவித்தார்.

எனினும், இதில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பிற்பகலில் தெளிவாகத் தெரியும் நிலை உள்ளது. கடந்த 2014 தேர்தலில் பாஜக 37 தொகுதிகள் பெற்று மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்திருந்தது.
இதன் முதல்வராக பாஜகவின் ரகுவர் தாஸ் பதவி வகித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in