

வெறுப்பையும், வன்முறையையும் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். வெறுப்பால் இந்தியாவை அழிக்க அனுமதிக்கக் கூடாது என்று இளைஞர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் வலுத்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 16 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும் டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், குடியுரிமைச் சட்டம் குறித்து தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்புகிறது என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. குடியுரிமைச் சட்டம் குறித்து மக்களிடம் விளக்கச் சிறப்புக் கூட்டம் நடத்தவும் பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் இன்று பிற்பகலில் காங்கிரஸ் சார்பில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு இளைஞர்கள் திரளாக வரவேண்டும் எனக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "அன்பு மாணவர்களே, இந்தியாவின் இளைஞர்களே, இந்தியா குறித்து உணர்வதற்கு இது நல்லவிதமானதாக இல்லை. நீங்கள் இந்தியாவில்தான் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டிய முக்கியமான தருணம். வெறுப்பால் இந்தியாவை அழிக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
தேசத்தில் வன்முறையையும், வெறுப்பையும் கட்டவிழ்த்து விடும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுககு எதிராக இன்று ராஜ்காட்டில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் போராட்டத்தில் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் விடுத்த அழைப்பில், " அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க ராஜ்காட்டில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்த தேசம் அனைத்து மக்களின் உணர்வுகளால், கனவுகளால் பின்னப்பட்டது. கடினமான உழைப்பால் இந்த தேசத்தை உருவாக்கி இருக்கிறோம். பிரித்தாலும் அரசியல், பிரித்தாலும் ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.