Last Updated : 23 Dec, 2019 10:42 AM

 

Published : 23 Dec 2019 10:42 AM
Last Updated : 23 Dec 2019 10:42 AM

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை; பாஜக பின்னடைவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேசமயம், பாஜக 31 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே 50 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும், பாஜக ஆட்சியை இழக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில் அதன்பின், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியும், ஏஜிஎஸ்யு கட்சியும் தலா 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

பாஜகவைச் சேர்ந்தவரும் முதல்வருமான ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து ரகுபர்தாஸ் இந்தத் தொகுதியில் வென்று வருகிறார் என்பதால், இந்த தொகுதி அனைவரின் எதிர்பார்ப்பையும் இந்த முறை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல ஏஜேஎஸ்யு கட்சியின் தலைவர் சுதேஷ் மாதோ சிலி தொகுதியிலும், ஜேவிஎம்-பி கட்சியின் தலைவர் பாபுல்கால் மாரண்டி தான்வார் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட பார்ஹெட் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். தும்கா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பாக்மாரா, பார்ஹி, பிஷுன்பூர், சந்தன்கியாரி, ஜாம்ஷெட்பூர் மேற்கு, பாகூர், பங்கி, போட்கா, சிம்டேகா, தோர்பா, ஹசாரிபாக் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x