

மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா, ஐஐஎம்-ஷில்லாங் தலைவர் ஷிஷிர் பஜோரியா, நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சுனைனா சிங் உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,100 கல்வியாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. குறிப்பாக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தனர். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்துக்கு வாழ்த்துகள்.
வடகிழக்கு மாநிலங்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் இந்த சட்டம் அமைந்துள்ளது திருப்தி அளிக்கிறது. அதேநேரம், எந்த நாடு, மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியக் குடியுரிமை கோரலாம் என நமது அரசியல் சாசன சட்டம் கூறுகிறது. நம் நாட்டின் இந்த மதச்சார்பற்ற தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். 3 நாடுகளில் இருந்து தஞ்மடைந்த சிறுபான்மை மதத்தினருக்கு விரைவாக நிவாரணம் வழங்கும் வகையில்தான் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த 3 நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறிய அகமதியா, ஹசாரா, பலூச் உள்ளிட்ட பிரிவினர் வழக்கமான நடைமுறைகளின்படி குடியுரிமை கோர எந்தத் தடையும் இல்லை.
இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் வன்முறை சம்பவங்களும் நடைபெறுவது வேதனை தருகிறது. இந்த தவறான பிரச்சாரத்தை யாரும் நம்ப வேண்டாம். அனைவரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.