போலி மருத்துவரின் அலட்சியத்தால் சிறுவனின் கால் துண்டிக்கப்பட்ட பரிதாபம்: மத்திய அரசு பதில் அளிக்க 2 வாரம் கெடு - தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியது

போலி மருத்துவரின் அலட்சியத்தால் சிறுவனின் கால் துண்டிக்கப்பட்ட பரிதாபம்: மத்திய அரசு பதில் அளிக்க 2 வாரம் கெடு - தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியது
Updated on
2 min read

மருத்துவர்களின் அலட்சியத்தால் 10 வயது சிறுவனின் கால் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து, 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ரானா பிரதாப் பாக் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. வீட்டு வேலைகள் செய்கிறார். இவரது கணவர் எலக்ட்ரீஷியன். இவர்களுக்கு 5 குழந்தைகள். இளைய மகன் பிலால். 10 வயது சிறுவனான பிலால், கடந்த மே 1-ம் தேதி நண்பர்களுடன் விளையாடியபோது, இடது காலில் கண்ணாடி துண்டு குத்தி ரத்தம் கொட்டியது.

வீட்டுக்கு வந்த மகனை, சங்கம் பார்க் பகுதியில் உள்ள ‘கிளினிக்’ ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் ரேஷ்மா. அங்கு பிலால் காலில் தையல் போட்டு, ரத்தப் போக்கு நிற்பதற்கு மாத்திரை தந்துள்ளார் மருத்துவர். ஆனால், காலில் குத்தி உள்ளே சென்ற கண்ணாடி துண்டை அந்த மருத்துவர் அகற்றவில்லை. அதனால் அன்று இரவு வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி இருக்கிறான். உடனடியாக டெல்லி மாநகராட்சி நடத்தும் இந்துராவ் மருத்துவமனைக்கு ரேஷ்மா அழைத்து சென்றுள்ளார்.

அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது இடது கால் பாதம் உள்ளே 2 அங்குலத்தில் கண்ணாடி துண்டு இருந்தது தெரிய வந்தது. ஆனால், 3 நாட்களுக்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டு காலில் இருந்து கண்ணாடி துண்டை வெளியில் எடுத்துள்ளனர். அதற்குள் பிலாலின் காலில் நோய் தொற்று ஏற்பட்டுவிட்டது. அங்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால், லோக் நாயக் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர். அங்கும் 2 நாள் சிறுவனை வைத்திருந்து அதன்பிறகு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

அதன்பிறகும் கால் அழுக ஆரம்பித்ததால் உடனடியாக மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு பிலாலை அழைத்து சென்றுள்ளனர். அங்கு விபரீதத்தை உணர்ந்த மருத்துவர்கள், பிலாலின் உயிரை காப்பாற்ற இடது காலை வெட்டி எடுத்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. இதற்கிடையில், பிலாலுக்கு முதன்முதலில் கிளினிக்கில் சிகிச்சை அளித்தவர் போலி மருத்துவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

அவற்றை பார்த்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து கொண்டது. மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுவனின் கால் துண்டிக்கப்பட்டது குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், டெல்லி சுகாதாரத்துறை செயலர், வடக்கு டெல்லி மாநகராட்சி ஆணையர், டெல்லி மருத்துவ கவுன்சில் செயலர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் டெல்லியில் போலி மருத்துவர்களை கண்டுபிடிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தவறு செய்யும் மருத்துவர்கள் மீதான நடவடிக்கை, அதற்கான திட்டங்கள், மருத்துவ துறை அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

“ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாக இருந்தால், இது மிக மோசமான மனித மீறலாகும்” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிகிச்சையில் அலட்சியமாக இருந்த 2 மருத்துவமனைகளை சேர்ந்த 4 மருத்துவர்களின் பதிவை டெல்லி மருத்துவ கவுன்சில் தற்காலிகமாக நீக்கி உள்ளது. மேலும் போலி மருத்துவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in