

டிசம்பர் 15-ல், உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது உ.பி. போலீஸார் நடத்திய தாக்குதல் மீது வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோல் ஆங்கிலேயர் காலத்தில் கூட நடைபெறவில்லை எனக் கருத்து கூறியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீதான போராட்டத்தில் டெல்லி போலீஸார், ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதைக் கண்டித்து உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் அதே தினம் போராட்டம் நடத்தினர்.
இதில், நிர்வாக அனுமதியுடன் வளாகத்தில் புகுந்த மத்திய படையினரும், உ.பி. போலீஸாரும் அதன் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை மற்றும் எல்லட் குண்டுகளையும் வீசி இருந்தனர். இதனால், ஜாமியாவுடன் சேர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இதில், அப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் தகைசால் பேராசிரியரான இர்பான் ஹபீப் அதன் நிர்வாகம் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அறிஞரான பேராசிரியர் இர்பான் ஹபீப் கூறும்போது, ''இதுபோல் அலிகர் பல்கலைக்கழக மணவர்கள் மீது பிரிட்டிஷாரின் ஆட்சியில் கூட நடைபெற்றதில்லை.
1938 ஆம் ஆண்டு மாணவர்களுடன் போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. இதில், தலைமை காவல்துறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரை மாணவர்கள் தாக்கி விட்டனர். எனினும், அப்போது கூட போலீஸார் வளாகத்தில் நுழையவில்லை'' எனத் தெரிவித்தார்.
அப்போது அலிகர் பல்கலை.யின் துணைவேந்தராக இருந்த சர் ஷா சுலைமான், தனது பேராசிரியர்களுடன் நேரில் வந்து மாணவர்களை அமைதிப்படுத்தி இருந்ததாகவும் இர்பான் ஹபீப் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில் அதன் வரலாற்றுப் பேராசிரியராக இர்பானின் தந்தையான முகம்மது ஹபீப் இருந்துள்ளார்.
இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் இர்பான் ஹபீப் குடியிருப்பு இருந்துள்ளது. 1951 இல் பாகிஸ்தான் அதிபரான லியாகத் அலி கான் கொல்லப்பட்ட போது இந்த மாணவர்களும் மூன்று நாள் போராட்டம் நடத்தி இருந்தனர்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த பேராசிரியர் இர்பான் ஹபீப் கூறும்போது, ''பாகிஸ்தானில் நடைபெற்ற லியாகத் சம்பவத்தில் இந்தியாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனினும், லியாகத் தம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் என்பதால் கண்டித்து நடைபெற்ற போராட்டம் தடுக்கப்படவில்லை’’ எனத் தெரிவித்தார்.
எனவே, தனது வளாகத்தில் அலிகர் பல்கலை. துணைவேந்தர் டாக்டர் தாரீக் மன்ஜூர் போலீஸாரை அனுமதித்ததன் மீது இர்பான் ஹபீப் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம், கடுமையான விமர்சனங்கள்ள் எழ அலிகர் பல்கலைகழக நிர்வாகமே காரணமாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மீது இர்பான் ஹபீப் கூறும்போது, ''பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விட்டாலும் அதன் ஆய்வு மாணவர்கள் விடுதிகளில் தங்கி தம் ஆய்வுகளைத் தொடர்வார்கள். ஆனால், இந்த முறை குளிர்கால விடுமுறை என அறிவித்து விட்டு மறுநாளே அனைத்து மாணவர்களை விடுதிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்'' எனக் குற்றம் சாட்டினார்.
வலதுசாரி எம்.பி.க்களுக்கு நேரு பதில்
குடியுரிமைச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய சம்பவத்தை இர்பான் ஹபீப் நினைவு கூர்ந்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் இர்பான் ஹபீப் கூறுகையில், ''1950-ல் சில வலதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவிடம் அலிகர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு நேரு, எங்கு சென்றாலும் அவர்கள் மனிதநேயத்திற்காகப் பணியாற்றுவார்கள் எனப் பதிலளித்து எம்.பி.க்கள் வாயை அடைத்தார்'' எனத் தெரிவித்தார்.
நீதிபதி தலைமையில் விசாரணை
இதனிடையே, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக டிசம்பர் 15 சம்பவத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி வி.கே.குப்தா தலைமையில் அமைந்த விசாரணை கமிஷன் அடுத்த மூன்று மாதங்களில் தன் அறிக்கையை அளிக்க உள்ளது.
இவர், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டிசம்பர் 15 கலவரத்தில் 78 மாணவர்கள் காயம் அடைந்ததுடன், 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ளனர்.