

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து தாரிக் மன்சூர் வெளியேற்றப்படுவதாக அறிவித்து மாணவர்களும் பேராசிரியர்களும் அறிக்கை வெளியிட்டனர். ஞாயிற்றுக்கிழமை அலிகரில் இணைய சேவைகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15-ம் தேதி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் டெல்லி போலீஸார் அத்துமீறி நுழைந்து மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தின் உள்ளே இரவு 10 மணிக்குப் போராட்டம் நடத்தினர்.
இதில் திடீரென அதன் நிர்வாக அனுமதியுடன் மத்திய பாதுகாப்புப் படையின் ரேப்பிட் ஆக்ஷன் போர்ஸ் பிரிவு நுழைந்தது. இவர்கள், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல் குறித்து பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் விசாரணை நடத்தினர். அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக உண்மை அறியும் குழுவின் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றுடன் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் மாணவர்கள் மீது சுட்டனர். இதில், ஒரு மாணவரின் கையில் கண்ணீர் புகை குண்டு பட்டு வெடித்ததால் மாணவர் படுகாயம் அடைந்ததாகவும் பல்கலைக்கழகத்தின் 2 பாதுகாவலர் உள்ளிட்ட 21 மாணவர்கள் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை எனவும், இவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரியாமல், போலீஸாரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் உண்மை அறியும் குழுவினர் தெரிவித்தனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் அலிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உ.பி. காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பின்னர், பல்கலைக்கழகம் ஜனவரி 5 ஆம் தேதி வரை மூடப்பட்டது.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த, மத்திய பாதுகாப்புத்துறையின் ரேப்பிட் ஆக்ஷன் போர்ஸ் பிரிவு படையினரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததாகக் கூறி தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரையில்லாத வகையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் துணைவேந்தர் தாரிக் மன்சூர் மற்றும் பதிவாளர் எஸ்.அப்துல் ஹமீத் ஆகியோரை 'வெளியேற்றியுள்ளதாக' அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாரிக் மன்சூர் மற்றும் பதிவாளர் எஸ்.அப்துல் ஹமீத் ஆகிய இருவரும் வெளியேற்றப்படுகிறார்கள். எனவே பல்கலைக்கழகம், மீண்டும் திறக்கப்படும்போது, அவர்கள் இருவரும் ஜனவரி 5, 2020க்குள் தங்கள் விடுதி அறையைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இருவரும் ராஜினாமா செய்து வளாகத்தை விட்டு வெளியேறும் வரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பல்கலைக்கழக நிர்வாகத்தைப் புறக்கணிப்போம்'' என்று தெரிவித்துள்ளனர்.