Last Updated : 22 Dec, 2019 05:07 PM

 

Published : 22 Dec 2019 05:07 PM
Last Updated : 22 Dec 2019 05:07 PM

எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைவு; பெங்களூருவில் இறந்து 3 நாட்களுக்குப் பின் சிதைந்த நிலையில் உடல் மீட்பு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் பெங்களூருவில் மரணம் அடைந்தார். இறந்து 3 நாட்களுக்குப் பின் அவரது உடல் மீட்கப்பட்டு, நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

சேலம் அருகிலுள்ள கொண்டலாம்பட்டியில் பிறந்தவர் எழுத்தாளர் நஞ்சுண்டன் (58). கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூர் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசியராகப் பணியாற்றி வந்தார். பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள ஞானபாரதி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்தார். புள்ளியியல் துறையில் திறம்படச் செயல்பட்ட நஞ்சுண்டன் 10க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், ஏராளமான கருத்தரங்க உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கன்னடத்தின் சிறந்த நவீன‌ கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்றவற்றை தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஞானபீட விருதுபெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தியின் ' பவா'' (பிறப்பு), அவஸ்தெ (அவஸ்தை) உள்ளிட்ட‌ நாவல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஏ.கே.ராமானுஜன், பி.சி.தேசாய், தேவனூரு மகாதேவ, அனுமந்தையா உள்ளிட்ட கன்னட எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களை தமிழில் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து வெளிவந்த காலச்சுவடு போன்ற இலக்கிய இதழ்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த நஞ்சுண்டன், 'சிமெண்ட் பெஞ்சுகள்', 'மாற்றம்' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும், சில கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். மரணம் தொடர்பான கன்னடச் சிறுகதைகளை, ''மரணம் மற்றும்..'' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னடத்துக்கும் தமிழுக்கும் இணைப்புப் பாலமாக விளங்கிய நஞ்சுண்டனுக்கு, 'அக்கா' சிறுகதை மொழிப்பெயர்ப்புக்காக 2012-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

தனிமையும் மரணமும்

மனைவி காஞ்சனா, மகன் சுகவனன் சென்னையில் வசித்த நிலையில் நஞ்சுண்டன் மட்டும் நீண்ட காலமாக பெங்களூருவில் தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான நிலையில் நுரையீரல் தொற்று, இதய நோயாலும் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையில் இருந்து நஞ்சுண்டன் கல்லூரிக்குச் செல்லாத நிலையில், தொலைபேசியிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவிலை. இதனால் சந்தேகம் அடைந்த ஞானபாரதி பகுதி போலீஸார் மனைவி, மகனை பெங்களூரு வரவழைத்து நேற்று காலையில் அவரது வீட்டைத் திறந்து பார்த்தனர்.

அப்போது நஞ்சண்டன் மரணமடைந்தது தெரியவந்தது. அவரது உடலும் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நஞ்சுண்டனின் குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைத்தனர். இதையடுத்து அவரது உடல் கெங்கேரியில் உள்ள சுடுகாட்டில் மாலையில் தகனம் செய்யப்பட்டது. நஞ்சுண்டனின் இறுதிச்சடங்கில் குடும்பத்தினர், உறவினர்கள், சொற்ப எண்ணிக்கையிலான இலக்கிய ஆர்வலர்களே கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஞானபாரதி போலீஸார் கூறுகையில், '' முதல்ககட்ட விசாரணையில் இயற்கைக்கு முரணான முறையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம். முழுமையான அறிக்கை கிடைத்த பிறகே நஞ்சுண்டனின் மரணத்துக்கான முழு காரணமும் தெரியவரும்'' என தெரிவித்தனர்.

எழுத்தாளர் நஞ்சுண்டனின் திடீர் மறைவு தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x