Last Updated : 22 Dec, 2019 03:05 PM

 

Published : 22 Dec 2019 03:05 PM
Last Updated : 22 Dec 2019 03:05 PM

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல: நிதின் கட்கரி விளக்கம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் எந்தவிதமான ஆவணங்கள் இல்லாமல் இந்த 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டு மக்களிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு அளிக்க விளக்கக் கூட்டமும் நடத்த பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாக்பூரில் ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த விளக்கப் பேரணியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. இந்தச் சட்டம் மூலம் உள்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான அநீதியையும் மத்திய அரசு இழைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிதான் இந்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களை வாக்கு வங்கிக்காகப் பரப்பி வருகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மை சமூகத்தினர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படவில்லை. இந்த நாட்டைவிட்டு முஸ்லிம்களை அனுப்புவது குறித்து யாருமே பேசவில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவிய வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் குறித்து மட்டுமே இந்தியா கவலைப்படுகிறது.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி எந்தவிதமான உதவியும் செய்யாது என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலம் உங்களுக்கு என்ன செய்தது? இதில் உள்ள சதியை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம் சமூகத்துக்கு பாஜகவால் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும், காங்கிரஸ் கட்சியால் அல்ல.

நீங்கள் சைக்கிள் ரிக்ஷாவைப் பயன்படுத்தினீர்கள். நாங்கள் உங்களுக்கு பேட்டரியில் இயங்கும் ரிக்‌ஷாவை வழங்கினோம். ஆனால், காங்கிரஸ் கட்சி உங்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. தவறான தகவலுக்கு மயங்கிவிடாதீர்கள்.

நாம் அனைவரும் ஒன்றுதான், நமக்கான அரசும் ஒன்றுதான். நீங்கள் மசூதிக்குச் செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டப்படி நாம் ஒன்றாக வாழப்போகிறோம், பணியாற்றப் போகிறோம். இதைத்தான் நாங்கள் சொல்கிறோம்’’.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x