

மத்தியப் பிரதேசம், போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு விமானத்தில் இருக்கை முன்பதிவு செய்தும் இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விமான ஊழியர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார்.
போபால் விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரமிடம் எழுத்துபூர்வமாக பிரக்யா தாக்கூர் தனது புகாரைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சனிக்கிழமை மாலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் போபால் நகருக்கு எஸ்ஜி 2489 என்ற எண் கொண்ட விமானத்தில் புறப்பட்டார். ஆனால், விமானத்தில் அவரிடம் விமானப் பணியாளர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் போபால் நகரத்தில் தரையிறங்கிய பின்பும் பிரக்யா தாக்கூர் தனது இருக்கையை விட்டு எழவில்லை.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் பிரக்யா தாக்கூரிடம் கேட்டபோது, "எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விமானப் பணியாளர்கள் வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருக்கிறேன்" என்று கூறி விமானத்தில் இருந்து இறங்கிச் சென்றார்.
அதன்பின் போபால் விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரமிடம், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தன்னை அவமதித்தது தொடர்பாகவும், ஒழுக்கக் குறைவாகவும் நடந்து கொண்டது குறித்தும் பிரக்யா தாக்கூர் புகார் அளித்தார்.
அதன்பின் பிரக்யா தாக்கூர் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஊழியர்கள் என்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதைப் புகாராக அதிகாரிகளிடம் அளித்துவிட்டேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை எனக்கு அளிக்காமல் அவமதிப்பு செய்தார்கள். இதுபோல் ஏற்கெனவே ஒருமுறை நடந்தது.
ரயில், விமானம், பஸ் போன்றவை மக்களின் வசதிக்காகவே இருக்கின்றன. மக்களின் பிரதிநிதியாக இருக்கும் என்னை அவமதித்தது என் தொகுதி மக்களை அவமதித்தது போன்றதாகும். அதனால் புகார் அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
பிரக்யா தாக்கூரின் புகார் குறித்து விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரம் கூறுகையில் "எம்.பி. பிரக்யா தாக்கூரிடம் இருந்து புகார் பெற்றேன். இப்போதைக்கு என்னால் கருத்து கூற முடியாது. ஸ்பைஸ் ஜெட் நிர்வாகத்திடம் இது தொடர்பாகப் பேசி அவர்களின் கருத்துகளையும் கேட்பேன். விமானத்தில் என்ன நடந்தது, எம்.பி. என்ன பேசினார், ஊழியர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் சேகரிக்கப்படும். ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் இதுபோன்ற சம்பவங்களுக்குத் தனியாக விதிமுறைகள் வைத்துள்ளது. அந்த நிறுவனமும் விசாரிக்கும்" எனத் தெரிவித்தார்.