பிரதமர் தலைமையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் தாக்குதல் நடத்த பாக். தீவிரவாத அமைப்பு சதி?
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பு சதி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
முறைப்படுத்தப்படாத குடியிருப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கவுள்ளது. இதுதொடர்பான விளக்கப் பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பேரணியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜேஇஎம் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீஸாருக்கும், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவான எஸ்பிஜி போலீஸாருக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்ததால் வெறுப்படைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட சதி செய்திருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து பிரதமருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் மேலும் சில கெடுபிடிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய சாலைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சாலை, தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டம், வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. தொலைவில் இருந்து துப்பாக்கியில் குறிபார்த்து சுடும் வீரர்கள், உயரமான கட்டிடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
