

தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதில் பல பகுதிகளில் கலவரங்களும், வன்முறையும் ஏற்பட்டுள்ளதால் சட்டம்-ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனிடையே, வன்முறையை தூண்டும் விதமான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி சேனல்களுக்கு கடந்த 11-ம் தேதி மத்திய அரசு சார்பில் அறிவிக்கைகள் அனுப்பப்பப்பட்டன. எனினும், கலவரங்கள் தொடர்பான காட்சிகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்த சூழலில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் செய்தி ஊடகங்களுக்கு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசவிரோத நடவடிக்கைகளையும், வன்முறைகளையும் ஊக்குவிக்கும்விதமான காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகியிருக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிரானதாகவோ, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ அமைந்திருக்கும் காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.