மும்பைக்கு வர வேண்டாம், மக்களைத் தேடி முதல்வர் அலுவலகம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பேசிய காட்சி: படம்|ஏஎன்ஐ.
முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பேசிய காட்சி: படம்|ஏஎன்ஐ.
Updated on
2 min read

முதல்வர் அலுவலகத்துக்கு குறை தீர் மனுக்களை அளிக்க மக்கள் யாரும் மும்பைக்கு வரத் தேவையில்லை. மகாராஷ்டிராவில் அனைத்து மண்டலங்களிலும் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப்பின், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அரசை அமைத்துள்ளன. இந்த அரசில் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.

இந்த மூன்று கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கு முன் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி அதன்படி ஆட்சி நடத்தி வருகின்றன.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த சில வாரங்களாக நடந்த நிலையில் இன்று கடைசி நாள் அமர்வு நடந்தது. கடைசி நாளான இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

''முதல்வர் அலுவலகத்தில் குறைகளைத் தெரிவிக்க மக்கள் மும்பைக்கு வருகிறார்கள். இனிமேல் யாரும் மும்பைக்கு வரத் தேவையில்லை. மண்டல வாரியாக, முதல்வர் அலுவலகம் திறக்கப்படும். இதில் ஒரு முதல்வர் அலுவலகம் சிவசேனாவின் இல்லமான மந்த்ராலயத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த நடவடிக்கையின் நோக்கம், அதிகாரம் பரவலாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

விவசாயிகளுக்கு வேளாண் கடன் ரூ.2 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கியில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

சிவசேனா தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல் ஏழை மக்களுக்கு 10 ரூபாயில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு 'ஷிவ் போஜன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநிலத்தில் சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதர்பா பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நீர்ப்பாசன திட்டங்களும் கிடப்பில் உள்ள அனைத்துத் திட்டங்களும் வரும் 2023-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

விவசாயிகளுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 வழங்கப்படும், மேலும், மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் கிருஷி சம்முருதி மையங்கள் உருவாக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in