

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக நடந்துவரும் போராட்டம், வன்முறை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் தொடங்கிய போராட்டம் டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தவுடன், பல்வேறு இடங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை போலீஸார் கலைத்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.
மீரட் மாவட்டத்தில் உள்ள கான்பூர், பிஜ்நோரில் தலா இருவர் உயிரிழந்தனர். இதில் வாரணாசியில் கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியபோது, கூட்டத்தினர் கலைந்து, சிதறி ஓடினர். அப்போது 8 வயது சிறுவன் கூட்டத்துக்குள் சிக்கி, மிதிபட்டு உயிரிழந்தான். மேலும், சம்பல், பிரசோபாத் ஆகிய நகரங்களிலும் நேற்று நடந்த வன்முறையில் தலா ஒருவர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் இன்று பல நகரங்களில் தொடர்ந்தது. ராம்பூர் நகரில் இன்று கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 12 முதல் 18 வயதில் இருக்கும் சிறுவர்கள் உள்பட 600 பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து அனுப்ப முயன்றபோது, அவர்கள் மீது கல்வீசித் தாக்கியதால் பெரும் வன்முறை ஏற்பட்டது.
இந்தக் கல்வீச்சில் போராட்டக்காரர்கள் 5 பேர் காயமடைந்தனர், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலிலும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதிலும் பலர் காயமடைந்தனர். 12-க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர் என்று ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அனுஜானே சிங் தெரிவித்தார்
கடந்த 4 நாட்களாக அமைதியாக இருந்த அலிகர் பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் போராட்டம் நடந்தது. பேராசிரியர் பணியில் அல்லாத பணியாளர்கள், ஆசிரியர் அமைப்புடன் இணைந்து இன்று போலீஸார் அராஜகத்தை எதிர்த்தும், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.
உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டமான காஸ்காஞ் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பதற்றத்தைக் குறைக்கும் வகையிலும், இணைய இணைப்பை போலீஸார் துண்டித்தனர்.
உத்தரப் பிரதேச போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறையில் 50 போலீஸார் காயமடைந்துள்ளனர். இன்று பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்தபோதிலும் போலீஸார் எந்தவிதமான துப்பாக்கிச் சூடும் நடத்தவில்லை.
இந்த வன்முறையில் இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிந்த பின்தான் காரணம் குறித்து அறியவரும். இதில் வெளிப்படையான நடவடிக்கைதான் எடுக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் யாரேனும் உயிரிழந்திருந்தால், அது குறித்து நீதி விசாரணை நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் தடுப்பு அரண்களாக வைத்துப் போராட்டம் நடத்துகிறார்கள். லக்னோவில் பெண்களும், சிறுவர்களும் போராட்டம் நடத்துகிறார்கள். வாரணாசியில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது.
மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் நான்கில் ஒரு பங்கு மாவட்டங்களில் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை. லக்னோவில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 218 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்".
இவ்வாறு போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்தார்.
உ.பி.யின் பாதோய், பாஹரியாச், அம்ரோஹா, பருக்காபாத், காஜியாபாத், முசாபர் நகர், வாரணாசி, சஹரான்பூர், ஹபூர், ஹத்ராஸ், புலந்த்சஹர், ஹமிர்பூர், மஹோபா மாவட்டங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த நகரங்களில் இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இன்று லக்னோ, கான்பூர், அலகாபாத், ஆக்ரா, அலிகார், காஜியாபாத், வாரணாசி, மதுரா, மீரட், மொராதாபாத், ராம்பூர், ஷாம்லி, சுல்தான்பூர் ஆகிய நகரங்களிலும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.