

குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழத்தில் இன்று மீண்டும் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸார் செய்வதறியாது திகைத்தனர்.
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிறு அன்று நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பேருந்துகள், போலீஸார் வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டன. மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தை எழுப்பியது.
மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் வலுத்தது. இதனால் பல்கலைக்கழகத்துக்கும் விடுமுறை விடப்பட்டது.
இந்த சூழலில் பல்கலைக்கழகத்தின் முன் இன்று பிற்பகலுக்குப் பின் ஏராளமான மாணவ, மாணவிகள் திரண்டு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான மாணவிகள், பெண்கள், குழந்தைகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முடியாமல் திணறினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மாணவிகள், மாணவர்கள் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிராகக் கோஷமிட்டனர். கடந்த வாரத்தில் போலீஸார் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு நீதி தேவை என்றும் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள், மாணவிகளோடு சேர்ந்து வீட்டில் இருக்கும் பெண்களும் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கடந்த 14-ம் தேதியைப் போல் அல்லாமல் பல்கலைக்கழகத்தில் 7-வது வாயிலின் முன் அமர்ந்த மாணவிகள், பெண்கள் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.