Last Updated : 21 Dec, 2019 01:58 PM

 

Published : 21 Dec 2019 01:58 PM
Last Updated : 21 Dec 2019 01:58 PM

பிரதமர் மோடி அரசின் அடுத்த திட்டம் என்பிஆர்: வரும் செவ்வாய்கிழமை மத்திய அமைச்சரவை கூடுகிறது

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை வரும் செவ்வாய்க்கிழமை கூட இருக்கும் நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 2020-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து இன்று அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார்.

டெல்லியில் உள்ள சாணக்கியாபுரியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திராவில் நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்துக்காகப் பிரதமர் அலுவலகம் அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த கூட்டம் நடைபெறும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு, தனியார் வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்காக அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சர்கள் குழுவிலும் 8 முதல் 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள அமைச்சர்கள் தங்களின் துறைரீதியாகச் செயல்பாடுகளை விளக்கிக் கூறுவார்கள்

இதேபோன்ற கூட்டம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி நடந்தது. அப்போது நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில்தான் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், அமைச்சர்கள் குழுக் கூட்டம் இன்று முடிந்தபின், செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, நாடுமுழுவதும் ஒவ்வொருவீட்டிலும் கணக்கெடுப்பு 2020ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-தேதிவரை நடத்தப்படும். இதன் மூலம் ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நாட்டில் வசிக்கும் மக்கள் குறித்த முழுமையான அளவை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பயோமெட்ரிக் தகவலும் இடம் பெறும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதன்படி நாட்டில் எந்த பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்பிஆர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x