

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், தயாநிதி மாறனை கைது செய்ய சிபிஐ-க்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 - 2007 காலகட்டத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 300-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் அதி வேக இணைப்புகளை வீட்டுக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த இணைப்புகள் அவரது குடும்ப நிறுவனமான சன் டிவி-க்கு பயன் படுத்தப்பட்டதாகவும் இதன்மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தயாநிதி மாறன் முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ சார்பில் தொடர்ந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்ததுடன் மூன்று நாட்களுக்குள் தயாநிதி மாறன் சரணடைய வேண்டும் என்று கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கோபால கவுடா, பானுமதி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வெளி நாட்டுக்கு தப்ப வாய்ப்புள்ளது மற்றும் வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற இரண்டு அம்சங்களின் அடிப்படையில் மட்டுமே முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்படுவது வழக்கம். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த இரண்டு அம்சங்களுமே வாதத்துக்கு வரவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றத்தன்மை எதுவும் இல்லை. பண ரீதி யிலான இழப்பு மட்டுமே குறிப் பிடப்பட்டுள்ளது. அவர்கள் கோரும் தொகைக்கு பில் அனுப்பப்பட வில்லை. அனுப்பினால் அதை செலுத்தத் தயார்” என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “பில் தயாரித்து அனுப்பாதது உங்கள் தவறு தானே? பில் அனுப்பினால் அவர் பணத்தை செலுத்த தயாராக இருக்கிறாரே? ரூ.8,000 கோடி தொடர்புள்ள மருத்துவ ஊழலில் அக்கறை காட்டாத சிபிஐ ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள இந்த வழக்கில் அதிக அக்கறை காட்டுவது ஏன்? தயாநிதி மாறனை கைது செய்ய ஆர்வம் காட்டுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
சிபிஐ சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, “பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மாறன் தன் செல்வாக்கை பயன் படுத்தி 300 இணைப்புகளை முறைகேடாக பெற்றுள்ளார். அதை தன் குடும்ப நிறுவனமான சன் டிவி-க்கு பயன்படுத்தி உள்ளார். அவரை போலீஸ் விசாரணையில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, பிஎஸ்என்எல், தயாநிதி மாறன் மற்றும் சன் டிவி இடையே நடந்த சதியை வெளியில் கொண்டு வர முடியும்” என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தனர். அத்துடன் வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை மாறனை கைது செய்ய இடைக்கால தடையும் விதித் தனர். இந்த வழக்கு குறித்து சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.