Published : 21 Dec 2019 10:37 AM
Last Updated : 21 Dec 2019 10:37 AM

உ.பி.யில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்: வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

உத்தரபிரதேசத்தின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நேற்று நடந்த போராட்டங்களின் போது பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோ, புலந்த்ஷெகர், கான்பூர், கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடைபெற்றன. தலைநகர் லக்னோவில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் நேற்று லக்னோவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீரட் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீஸாரை நோக்கி சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர். முஸாபர்நகரில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

கோரக்பூரில் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாவட்ட எஸ்.பி.யின் கார் சேதப்படுத்தப்பட்டது. அங்கும் தடியடி நடத்தப்பட்டது.

புலந்த்ஷெகர் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெரோஷாபாத்தில் புறக்காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. வாரணாசி, மதுரா, மொராதாபாத், பரேலி, மவு, ஆசம்கர், சுல்தான்பூர், ஆக்ரா, நொய்டா, அம்ரோஹா, ஹாபூர், கான்பூர், உன்னாவ், சம்பல் உட்பட உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். 15 மாவட்டங்களில் இணைய சேவை 45 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பதற்றமான நகரங்களில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸார் கூறுகையில் உத்தர பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த நேற்று நடந்த போராட்டம், அதில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் இன்று காலை உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். மற்றவர்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறைச சம்பவங்களில் ஏராளமான போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x