குடியுரிமைச் சட்டம்; பிஹாரில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

குடியுரிமைச் சட்டம்; பிஹாரில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து பிஹார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் தலைநகர் பாட்னா உட்பட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அக்கட்சி தொண்டர்கள் திரண்டு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in