குடியுரிமை சட்டம் குறித்து பேச அசாம் முதல்வர் அழைப்பு
அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் நேற்று கூறியதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டம்தொடர்பாக அசாம் மாநிலத்தில் உள்ள மக்கள் கவலைப்படவில்லை. குடியுரிமைத் திருத்தச்சட்டம் மூலம் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அசாம் மாநிலத்துக்குள் நுழைய முடியாது.
ஆனால், வங்கதேசத்தில் மதரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு அங்கிருந்து தப்பி வந்து, பல ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம். குடியுரிமை விண்ணப்பம் நிரப்பிக் கொடுக்கும் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் பட்டியல் வெளியிடப்படும். இது மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும்.
புதிதாகக் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால் நமது சமூகக் கட்டமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தமுடியாது. அரசியலமைப்பின் 6-வது பட்டியல் படி அசாம்மாநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன்படி அசாம் மாநிலம்,தனது கலாச்சார, சமூக, மொழி,பாரம்பரிய அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஆதலால், மக்கள் யாரும் தவறான தகவல் மூலம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் தலைவர்களை என்னுடன் பேசுவதற்கு அழைக்கிறேன். இதுதான் சரியான வழி. இருதரப்பினரும் அமர்ந்து பேசினால் தீர்வு காணலாம். அனைத்தும் சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ
