

குடியுரிமையை நிரூபிக்கக் கோரி ஒருவரின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழையோ அல்லது 1971-ம் ஆண்டு முந்தைய தாத்தா, பாட்டி ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்டு யாரையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யப்படமாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசம், கர்நாடக எனப் பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ், தாத்தா, பாட்டிஆகியோரின் சான்றிதழ்கள் கேட்கப்படும், தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் பரவின. இந்த தகவல்களை நம்பியும் ஏராளமானோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளாவது:
கல்வியறிவு இல்லாத குடிமக்களிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் சாட்சியங்களையும், உள்ளூர் கிராம அதிகாரிகளின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பிறந்த தேதி அல்லது பிறந்த இடம் குறித்த சான்றிதழ் அல்லது இரு சான்றிதழ்களையும் அளித்து குடியுரிமையை நிரூபிக்கலாம். ஏராளமான ஆவணங்கள் இந்த பட்டியலில் இருப்பதால், எந்த இந்தியக் குடிமகனும் தேவையில்லாமல் தொந்தரவோ செய்யப்படமாட்டார்கள். இதுதொடர்பான வரையறைகளை உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும்.
இந்தியக் குடிமக்களாக இருப்போர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க 1971-ம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்போ தங்கள் தாய், தந்தை அல்லது, தாத்தா, பாட்டி பிறப்பு சான்றிதழ் களையோ, வழங்க வேண்டிய அவசியம் இல்லை " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.