

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மற்றும் கோரக்பூரில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லி, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உட்பட அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது பழைய லக்னோ பகுதியில் ஒரு காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அதன்பிறகும் போராட்டம் நீடித்ததால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய் குமார் லாலு உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்கு 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது. சம்பல் பகுதியில் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அங்கும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது.
வன்முறை ஏற்பட்ட லக்னோ, சம்பல் பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பு கோரக்பூரில் இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்தநிலையில் புலந்த்ஷார், கோரக்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. புலந்த்ஷரில் திடீரென வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதுடன், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இதுபோலவே கோரக்பூரிலும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இன்று நடந்த போராட்டத்தை தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
குறிப்பிட்ட இடத்தை தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் நடத்த முற்பட்டபோது போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்ட முற்பட்டனர். போராட்டக்காரர்கள் பதிலடியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபோலவே மீரட் உள்ளிட்ட நகரங்களிலும் இன்று போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.