

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜும்மா மசூதி அருகே இன்று ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார், துணை ராணுவப் படையினர் என ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் கடந்த ஒருவாரமாக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன், டெல்லி ஜும்மா மசூதி முதல் ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால், வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின் முஸ்லிம் மக்கள் ஏராளமானோர் இந்தப் பேரணிக்காகக் குவிந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலர் அம்பேத்கர், கான்ஷி ராம், பகத் சிங் ஆகியோரின் உருவப்படத்துடன் பங்கேற்றார்கள். ஆனால், போராட்டம் நடத்துவதற்கும், பேரணி நடத்துவதற்கும் டெல்லி போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
ஆனால், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் செல்லும் வழியில் டெல்லி கேட் அருகே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அவ்வழியே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் 7 மெட்ரோ நிலையங்கள் வாயில்களை மூடியது. சாவ்ரி பஜார், லால் குயிலா, ஜும்மா மசூதி, டெல்லி கேட், ஜாப்ராபாத், சீலம்பூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் பகுதிக்குப் பேரணியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் தார்யாகாஞ்ச் எனும் பகுதியில் சந்திரசேகர் ஆசாத் தப்பிவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.