

நாட்டின் நலன் கருதி, குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன. கடந்த ஒருவாரமாக மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் வன்முறை நடந்த நிலையில், கடந்த இரு நாட்களாக அமைதி நிலவுகிறது.
இருப்பினும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் கடந்த 2 நாட்களாக ஊர்வலங்கள், பேரணிகள், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்தன.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''மக்களுக்கு விரோதமாக இருக்கும் குடியுரிமைச் சட்டம் மற்றும் நாடு முழுவதும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள என்ஆர்சி ஆகியவற்றைப் பிரதமர் மோடி நாட்டின் நலன் கருதித் திரும்பப் பெற வேண்டும்.
இது எந்தவிதமான அரசியல் வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. இது நாட்டின் நலனுக்கான விஷயம் என்பதால் இரு சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்தேன்.
நான் என்னுடைய நாட்டைப் பெருமையாக நினைக்கிறேன். மக்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். எந்த அமைப்பிலும் சாராத, தேசிய மனித உரிமை ஆணையம் உறுப்பினர்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தலாம். அதை ஐ.நா.கண்காணிக்கட்டும்".
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஜவடேகர் கண்டனம்
இதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜவடேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "மம்தா பானர்ஜி பொது வாக்கெடுப்பு கோரியது அதிர்ச்சியாக இருக்கிறது. வாக்கெடுப்பைக் கண்காணிக்க ஐ.நா.வுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. 130 கோடி மக்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் இதை மம்தா கூறியுள்ளார். இதற்காக மம்தா பானர்ஜி மன்னிப்பு கோர வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக சிலர் குழப்பத்தை விளைக்க முயல்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். சரியான அணுகுமுறையில் சென்று மக்களிடம் எடுத்துரைப்போம்" எனத் தெரிவித்தார்.