

பாகிஸ்தானுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் மற்றும் ஆந்திராவில் உளவு வேலைப் பார்த்ததாகவும் எழுந்த புகார்களை அடுத்து இந்தியக் கடற்படையை சேர்ந்த 7 பேரும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,
இந்தக் குற்றச்சாட்டில் சிக்கிய 7 பேர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் தொடர்பிருப்பதால் பயங்கரவாதத் தொடர்பிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆபரேஷன் டால்பின் நோஸ்:
“மத்திய உளவுத்துறைகள், நேவி ஆகியவற்றுடன் இணைந்து ஆந்திரப் பிரதேச உளவு அமைப்பு நடத்திய தீவிர புலனாய்வில் சதி அம்பலப்பட்டு முறியடிக்கப்பட்டது. அதாவது உளவாளிகளைப் பயன்படுத்தி ராணுவ ரகசியம் உள்ளிட்ட முக்கியத் தகவல்களைத் திரட்டுவது என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான மேலும் சிலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.” என்று காவல்துறை உயரதிகாரியான டிஜிபி கவுதம் சவங் தெரிவித்தார்.
ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்த மேல் விவரங்களையும் இந்தச் சதிக்கும்பல் பற்றிய விவரங்களையும் அளிக்க போலீஸ் மறுத்து விட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிஜிபி தெரிவித்தார்.