

தோல்விகளைக் குறைகளாகக் கருத முடியாது, அவ்வாறு நினைத்தால் சவால்களை எதிர்கொள்ளும் தன்மையை நமது நாடு ஒருபோதும் வளர்த்துக் கொள்ள முடியாது, கேள்விக்குள்ளாக்குவது சிலரின் தேசிய கடமையாகிவிட்டது என பிரதமர் மோடி பேசினார்.
தொழில் வர்த்தக அமைப்பான ‘அசோசெம்’ நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நாடுமுழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடியை முதலீடு செய்து வருகிறோம். கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்காக ரூ.25 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீரை உறுதி செய்ய ரூபாய் 3.5 லட்சம் கோடியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்
5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக நமது நாடு மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். அதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். தோல்விகள் வருவது இயல்பு தான். ஆனால் சவால்களை எதிர்கொண்டு தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டும்.
தோல்விகளைக் குறைகளாகக் கருத முடியாது. அவ்வாறு நினைத்தால் சவால்களை எதிர்கொள்ளும் தன்மையை நமது நாடு ஒருபோதும் வளர்த்துக் கொள்ள முடியாது. இதற்கு முன்பும் இதுபோன்று சாதித்து காட்டி வரலாறு நமக்கு உண்டு.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்திய வங்கித்துறை எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த இழப்புகளை ஈடுசெய்ய ஆறு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பொருளாதாரத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முடிவுகளை கேள்விக்குள்ளாக்குவது சிலரின் தேசிய கடமையாகிவிட்டது.
அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டு வெளிப்படையானதாக மாற்றப்பட்டு வருகிறது. இனி வருமான வரித்துறைக்கும் வருமான வரி செலுத்துவோருக்கும் இடையே யாரும் வரவேண்டிய தேவை இருக்காது. இது சிலருக்கு நல்ல நடவடிக்கையாகவும் சிலருக்குத் பிரச்சினையாக இருக்கும்.’’ எனக் கூறினார்.