

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த பீம் ராணுவ மாணவர் அமைப்புக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் மூண்டது.
நாட்டில் கலவரங்கள் ஏற்படாமல் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அசாம், உ.பி.யின் சில பகுதிகளில் கர்நாடகாவில் சில பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொபைல் இணைய சேவைகளை அதிகாரிகள் இடைநிறுத்தியதோடு, பரபரப்பான போராட்டத்தைத் தணிக்க போக்குவரத்து இயக்கத்தையும் தடைசெய்திருந்தாலும், கடுமையான பாதுகாப்பு தடை மற்றும் தடை உத்தரவுகளை மீறி எதிர்க்கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, நிலோட்பால் பாசு, பிருந்தா காரத், அஜய் மக்கன் உள்ளிட்ட பல தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை மற்றும் மண்டி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட சந்தீப் தீட்சித் மற்றும் ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், உமர் காலித் ஆகியோர் 1,200 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். நேற்றிலிருந்து டெல்லி செங்கோட்டை அருகில் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பீம் ராணுவ மாணவர் அமைப்பினரின் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த ஜந்தர் மந்தர் பகுதி 144 தடை பிறப்பிக்கப்பட்ட பகுதிக்குள் வருகிறது. மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல்களும் போலீஸாருக்குக் கிடைத்தன. இதனை அடுத்து ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த பீம் ராணுவ மாணவர் அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.