

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று நடந்த போராட்டத்தின்போது இருவர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான நிலையில், இன்று அமைதியான சூழல் நிலவுகிறது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இன்னும் பதற்றமான சூழல் ஆங்காங்கே நீடிப்பதால் வரும் 22-ம்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லி, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் மங்களூரு நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸார் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 20 போலீஸார் காயமடைந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மங்களூரு நகரத்தில் நிலைமை இன்று காலை முதல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மங்களூரு போலீஸ் ஆணையர் பி.எஸ். ஹர்சா நிருபர்களிடம் கூறுகையில், "மங்களூரு நகரின் நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருக்கிறது. அமைதி நிலவுகிறது. ஆனால், இன்னும் பல பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், அங்கு 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழல் காரணமாக வரும் 22-ம் தேதி வரை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொது அமைதி கருதி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.