Published : 20 Dec 2019 09:46 AM
Last Updated : 20 Dec 2019 09:46 AM

நேபாள எல்லை வழியாக இந்திய விரோத சக்திகள் ஊடுருவல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை

புதுடெல்லி

இந்தியாவில் அமைதியை விரும்பாத சில சக்திகள் நேபாள எல்லை வழியாக நாட்டுக்குள் ஊடுருவுகின்றன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

1962-ல் சீன ஆக்கிரமிப்புக்கு பிறகு சஷாஸ்த்ரா சீமா பல் (எஸ்எஸ்பி) என்ற பெயரில் ஆயுதப் படை உருவாக்கப்பட்து. நேபாளம் மற்றும் பூடான் உடனான 1,751 கி.மீ. நீள இந்திய எல்லையை இப்படை பாதுகாக்கிறது. இது அமைக்கப்பட்டதன் 56-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்றுகொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

நம் நாட்டில் அமைதி நிலவுவதையும் அண்டை நாட்டுடன் மூடப்படாத எல்லையை நாம் கொண்டிருப்பதையும் சில சக்திகள் விரும்பவில்லை. இத்தகைய சக்திகள் நேபாளத்தின் திறந்த எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றன. கடந்த ஓராண்டில் இந்த எல்லை வழியாக ஊடுருவிய 2 பாகிஸ்தானியர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் தவிர 24 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

நேபாளம் மற்றும் பூடானுடன் இந்தியா மிகவும் சுமூகமாக மற்றும்நட்பான உறவை கொண்டுள்ளது. இந்த நாடுகளின் மக்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதை எஸ்எஸ்பி உறுதி செய்கிறது. நேபாளம் மற்றும் பூடான் எல்லையில் கடந்த ஓராண்டில் ரூ.166 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் உட்பட சுமார் ரூ.380 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை எஸ்எஸ்பி பறிமுதல் செய்துள்ளது.

எஸ்எஸ்பி உள்ளிட்ட அனைத்து எல்லைப் படைகளும் மைனஸ் 46 டிகிரி முதல் 47 டிகிரி செல்சியஸ் வரையிலான சவால் மிகுந்த வெப்பநிலையில் பணியாற்றி நாட்டை பாதுகாப்பதால்தான் நாட்டின் 130 கோடி மக்களும் அமைதியாக உறங்க முடிகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அனைத்து எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் குறைந்தபட்சம் 100 நாட்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிடுவதை மத்திய அரசு உறுதி செய்யும். இது கடினமான பணி என்றாலும் பிற கடினமான இலக்குகளை அடைந்துள்ள நரேந்திர மோடி அரசால் இந்த இலக்கும் எட்டப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் எஸ்எஸ்பி-யில் கூடுதலாக 12,055 வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அமித் ஷா ஏற்றுக்கொண்டார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு அவர் பதக்கங்கள் வழங்கினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x