

ஆபாச இணைய தளங்களை முடக்குவது இயலாத காரியம். அப்படி செய்தால் அதே வார்த்தைகள் பயன்படுத் தப்பட்டுள்ள நல்ல இலக்கியங் களும் முடக்கப்பட்டு விடும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் ஆபாச இணைய தளங்கள் பெருகி விட்டன. அவற்றை முடக்க உத்தரவிட வேண்டும்” என்று கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.சவுஹான் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்ச்வானி, “ஆபாச இணைய தளங்களை முடக்க இந்தியாவில் போதிய சட்டங்கள் இல்லாததால், இத்தகைய இணைய தளங்கள் பெருகி விட்டன. நாட்டில் 20 கோடி ஆபாச வீடியோக்கள், காட்சிகள் இலவசமாக கிடைக்கின்றன” என்று வாதிட்டார்.
அப்போது மத்திய அரசின் பதில் மனுவை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆபாச இணைய தளங்கள் அனைத்தையும் முடக்குவது இயலாத காரியம். ஆபாச தளங் களை முடக்க வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கணினி தயாரிக்கும் நிறு வனங்கள் அதற்குரிய மென்பொருளுடன் அதை விற்பனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக் கப்பட்டது.