

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டம் நடந்தது. எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா உள்ளிட்ட ஏராளமானோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்துக்குப் பின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
ஹூப்பள்ளி, கலாபுர்கி, ஹசன், மைசூரு, பெல்லாரி ஆகிய மாவட்டங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடந்தது. இதில் எழுத்தாளரும், வரலாற்று அறிஞருமான ராமச்சந்திர குஹா பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ராமச்சந்திர குஹாவை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது போலீஸாரிடம், "நான் ஜனநாயக முறையில்தான் போராடுகிறேன். என்னை ஏன் கைது செய்கிறீர்கள். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அமைதியான முறையில் போராட போலீஸார் ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள்" எனக் கேட்டார். ஆனால், ராமச்சந்திர குஹாவை கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.
போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கிரண் மஜூம்தார் ட்விட்டரில் கூறுகையில், "எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை. அமைதியான போராட்டத்தை இதுபோன்று தவறாகக் கையாளக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், "குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி முஸ்லிம் சமூகத்தினரிடையே தேவையில்லாத அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம். இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள், சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பது எங்களின் பொறுப்பு. தயவுசெய்து ஒத்துழைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதியில்லை. 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் யாரும் நடத்தக்கூடாது, போலீஸார் அனைத்தையும் கண்காணிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்று காலை முதல்வர் எடியூரப்பா திடீர் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக பெங்களூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் வரும் 21-ம் தேதிவரை 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.