

குஜராத்தில் படேல் சமூகத்தினர் மூன்றாவது நாளாக நேற்றும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அம்மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.அகமதாபாத், சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் படேல் சமூகத்தினர் தற்போது முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்கக் கோரி பல ஆண்டுகளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி அகமதாபாதில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர்.
போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேலை போலீஸார் கைது செய்தனர். இதனால் வன்முறை வெடித்தது. 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 100 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள், வணிக தலங்கள் சூறையாடப்பட்டன.
வன்முறையைக் கட்டுப்படுத்த அகமதாபாத், பனாஸ்கந்தா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந் தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அகமதாபாத், சூரத், பதார், பலான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். அடுத்தகட்டமாக அவர் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதனால் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மூன்றாவது நாளாக நேற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங் களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே கலவரத்தில் காயமடைந்தவர்களில் சவுதிக் பஜார் போலீஸ்காரர் திலீப் ரத்தோர் உட்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், மேசனா, வடோதரா, ஜாம்நகர், பனாஸ்கந்தா, விஸ்நகர் ஆகிய பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நகரங்களின் முக்கிய வீதிகளில் அவர்கள் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். பாதுகாப்பு காரணமாக அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
ரணீப், சாண்டோல்டியா ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங் களை மர்ம நபர்கள் தகர்த்தனர். இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ராஜ்நாதி, ஆஷ்ராம் எக்ஸ்பிரஸ் உட்பட 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 19 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டன.
பெருநகரங்களில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பால் ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. மாநிலத்தின் இதர பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.