Published : 19 Dec 2019 12:00 PM
Last Updated : 19 Dec 2019 12:00 PM

எடியூரப்பா இப்படிச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை: 144 தடை உத்தரவு குறித்து சித்தராமையா கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா முதல்வர் எடியூரப்பா இவ்வாறு செய்வார் என தான் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில் கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியல் சாசனத்தின் நன்மதிப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து தற்போது மக்கள் ஜனநாயக முறைப்படி போராடும் உரிமையைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.எடியூரப்பா இப்படி மோடி சொற்படி ஆடுவார் என நான் நினைக்கவில்லை. எடியூரப்பா முற்போக்கானவர் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்றே நான் கருதியிருந்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு டவுன் ஹாலில் இடது சாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ கண்டித்து இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x