

பெண்களுக்கும் மாணவிகளுக்கும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி தெரிவிக்க பள்ளி கல்லூரிகளுக்கு வெளியே புகார்ப் பெட்டிகள் வைக்க மத்தியப் பிரதேசத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்தியப் பிரதேச காவல்துறை ஒருபடி முன்னே உள்ளது. தங்கள் மீது தொடுக்கப்படும் கிண்டல், கேலி உள்ளிட்ட துன்புறுத்தல்களைப் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வெளியே புகார்ப் பெட்டிகளை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெட்டி கி பேட்டி எனப்படும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தின் வெளியே ஒரு புகார்ப் பெட்டியை அமைத்து குவாலியர் சரக கூடுதல் காவல்துறைத் தலைவர் ராஜ்பாபு சிங், நேற்று தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து முதற்கட்டமாக மாநிலத்தின் குவாலியர் மண்டலத்தைச் சேர்ந்த குவாலியர், குணா, ஷிவ்புரி மற்றும் அசோக் நகர் ஆகிய மவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், பயிற்சி மையங்கள் ஆகிய இடங்களில் இந்தப் புகார்ப் பெட்டிகள் அமைக்கப்பட்டன. இந்தப் பெட்டிகளிலிருந்து காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருநாளும் வந்து எடுத்துச்செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கூடுதல் காவல்துறை தலைவர் கூறுகையில், ''நாளுக்கு நாள் அதிகாரித்து வரும் பெண்கள் மீதான பல்வேறு வகையான தாக்குதல்களைத் தடுத்திட , பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் விழிப்புணர்வு மேம்பாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தப் புகார்ப் பெட்டிகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பெட்டியியிலிருந்து புகார் கடிதங்களை பெண் போலீஸார் வந்து எடுத்துச் செல்வார்கள்'' என்றார்.