

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக்கண்டித்து நேற்று ஹவுராவிலிருந்து கொல்கத்தாவிலுள்ள எஸ்பிளனேடுக்கு கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டைப் பிரித்தாளப் பார்க்கிறது பாஜக.
குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை ஏற்க முடியாது. என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். அப்படியானால் எதற்காக ஆதார் எண்ணை, நலத்திட்டங்கள் பெறுவதற்கு வங்கிகளுடன் இணைக்கவேண்டும் என்று நான் கேட்கிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாடு பற்றியெரிகிறது. இந்தத் தீயை அணைக்க வேண்டியது அமித் ஷாவின் வேலை. அவர்பற்ற வைத்த தீயை அவர்தான் அணைக்கவேண்டும்.நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் பாஜக தலைவர்களையும் அவர் கட்டுப்படுத்த வேண்டும்.
அனைவரது வளர்ச்சிக்காகவும் என்று மத்திய அரசு குரல் கொடுத்துவருகிறது. ஆனால் நாட்டில் அனைவரையும் பேரழிவில் தள்ளவே இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.