Published : 19 Dec 2019 08:12 AM
Last Updated : 19 Dec 2019 08:12 AM

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அறிவிப்பு

என். மகேஷ்குமார்

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலம் உருவானது. ஹைதராபாத் இதன் தலைநகராக அறிவிக்கப்பட்டதால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாமல் போனது. இதையடுத்து குண்டூர் மாவட்டம் கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகரம் அமைக்க முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு முடிவு செய்தது.

இதுகுறித்து மக்களிடையே கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய இரு பகுதிகளின் நடுவில் தலைநகரம் அமைவதாலும் உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலங்களுக்கு சென்றுவர இது வசதியாக இருக்கும் என்பதாலும் ஆந்திரமக்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இதனை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெகன்மோகனும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து தலைநகருக்கு அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.

தலைநகர் அமராவதிக்காக அப்பகுதி விவசாயிகள் தாமாக முன்வந்து 33 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கினர்.

உலகின் முன்மாதிரி நகரமாக அமராவதியை உருவாக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் அரசின் உதவியை சந்திரபாபு நாயுடு அரசு நாடியது.

அமராவதியில் முதற்கட்டமாக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. புதிய தலைமைச் செயலகத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சி நடத்தியது.

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் பதவியேற்றார். அவர் முதல்வரானதும் முந்தைய அரசின் பல்வேறு திட்டங்களை மாற்றி அமைத்தார். இதில் தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்டமும் மாற்றி அமைக்கப்படும் என கடந்த 6 மாதங்களாக பேச்சு நிலவியது.

இந்நிலையில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “புதிய திட்டத்தின்படி அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் (தலைமைச் செயலகம்), கர்னூல் சட்டத் தலைநகராகவும் (உயர் நீதிமன்றம்) விளங்கும். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு தனது ஆய்வறிக்கையை 10 நாட்களில் அரசிடம் சமர்ப்பிக்கும். மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சி அடையும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகரம் அமைக்கும் திட்டம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்” என்றார்.

விவசாயிகள் எதிர்ப்பு

முதல்வர் ஜெகன்மோகனின் இந்த அறிவிப்பால் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக குண்டூரில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் விவசாயிகள் தர்ணா செய்தனர். தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அமராவதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x