

கர்நாடக மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இது சட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்ப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என அவர் கூறினார்.