ஐசியுவில் பொருளாதாரம்; இந்தியா மிகப்பெரிய சரிவைச் சந்திக்கிறது: அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை

அரவிந்த் சுப்பிரமணியன் | கோப்புப் படம்.
அரவிந்த் சுப்பிரமணியன் | கோப்புப் படம்.
Updated on
3 min read

அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. மிகப்பெரிய பொருளாதாரச் சரிவையும் சந்தித்து வருகிறது என்று மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முதல் முறையாகப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் அரவிந்த் சுப்பிரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாகவே சரிந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகச் சரிந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகக் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மேம்பாட்டுக்கான ஆய்வுக் கட்டுரையில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

அரவிந்த் சுப்பிரமணியன் தாக்கல் செய்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

''இந்தியாவின் பொருளாதாரம் 4 விதமான வரவு செலவு அறிக்கை சவால்களைச் சந்தித்து வருகிறது. வங்கிகள், உள்கட்டமைப்பு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆகிய பரிவுகளில் சவால்களையும், பாதகமான மாறும் வட்டி வீத வளர்ச்சியிலும் சிக்கி இருக்கிறது. இது சாதாரண பொருளாதாரச் சரிவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது. பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) இருக்கிறது.

இந்தியாவின் இரு இருப்புநிலை அறிக்கைகள் சிக்கலில் சிக்கியுள்ளன. முதலாவது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் பெற்று அது வாராக்கடனாகி இருக்கும் சிக்கல். அதாவது முதலாவது இருப்புநிலை அறிக்கை-1 பிரச்சினை என்பது கடந்த 2004-2011 ஆம் ஆண்டுவரை முதலீடு வருகை உச்சத்தில் இருந்தபோது உருக்கு நிறுவனங்கள், மின்சக்தி நிறுவனங்கள், கட்டுமானத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வங்கிகள் அளித்த கடன் தற்போது வாராக்கடனாகி உள்ளது.

2-வது இருப்புநிலை அறிக்கை (டிபிஎஸ்2) பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் அடைந்த பாதிப்புகள்.

உலகப் பொருளாதார நிதிச்சிக்கல் உருவானதில் இருந்து, இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்திய ஏற்றுமதி, முதலீடு ஆகியவை மந்தமாகியது. இன்றுள்ள நிலையில், மக்களின் நுகர்வு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவாகச் சரிந்து வருகிறது. உண்மையில் இந்தியப் பொருளாதாரம் விரைவாகக் கீழ்நோக்கி சரிந்து வருகிறது.

நிறுவனங்களின் கடன் பெறும் செலவு, ஜிடிபியின் 4 சதவீதப் புள்ளிகளைக் கடந்துள்ளது. அதாவது நிறுவனங்கள் ஈட்டும் வருவாயைக் காட்டிலும் வட்டி செலுத்துவது அதிகரித்துள்ளது. இந்தச் செயல்பாட்டை நாம் ஆய்வு செய்யாவிட்டால், பொருளாதாரம் தொடர்ந்து வேகமாகச் சரியும் நிலைக்குச் செல்லும். வளர்ச்சி அழுத்தத்துக்கு உள்ளாகும்.

பொருளாதாரம் நிலையான வேகமான வளர்ச்சிப் பாதைக்குச் செல்வதற்கு நடவடிக்கை கண்டிப்பாகத் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தற்போதுள்ள சூழல்கள், நிலையான பேரியியல் பொருளாதாரக் கருவிகள் பயன்படாது. அதை அரசாலும் செய்ய முடியாது. உதாரணமாக, தனிமனிதர்களின் வருமான வரியைக் குறைத்தாலும், ஜிஎஸ்டி வரியை உயர்த்தினாலும் பயன் அளிக்காது. இவற்றைச் சரிசெய்ய நிதிக் கொள்கையை எளிமையாக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ரியல் எஸ்டேட், நிதிக் கணக்குகள், வங்கியின் சொத்துகள் ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை மேம்படுத்த வேண்டும். வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் சொத்துகளைப் புதிதாக மதிப்பிட வேண்டும். திவால் சட்டத்திலும் உரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைச் சீரமைக்க இரு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒருவர் ரியல் எஸ்டேட் துறைக்கும், மற்றொருவர் மின்சக்தி துறைக்கும் தேவை. அதேசமயம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களையும் பலப்படுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளைக் குறைக்கும் நடவடிக்கைகள், வங்கி மறுமுதலீடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏராளமான பணம் வங்கிக்குள் வந்துள்ளது. மக்களுக்குக் கடன் அளிக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் பிரிவுக்கு கடன் அளிக்க முடியாமல் பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் வங்கி அல்லாத நிறுவனங்கள் ரூ.5 லட்சம் கோடி கடனை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வழங்கி நிலுவையில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் கடன்கள் குவிவது ஆபத்தான சூழலாகும்.

நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி நிறுத்தப்பட்டு இருக்கிறது. முதலீட்டுப் பொருட்களின் உற்பத்தியும் சரிந்துவிட்டது. ஏற்றுமதி, இறக்குமதி, அரசின் வருவாய் அனைத்தும் சரிந்து பாதகமான நிலையில் இருக்கிறது. இந்த சமிக்ஞைகள் அனைத்தும் பொருளாதாரம் இயல்புக்கு மாறாக மோசமான நிலையில் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது''.

இவ்வாறு அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in