

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மாணவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை வலியுறுத்தினார்.
மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் கடந்த இரு நாட்களாகப் போராட்டத்தில் 100 தனியார் வாகனங்கள், 10 போலீஸார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 20-ம்தேதி நடைபெற உள்ளது. பக்கூர் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அது தோல்வி அடைந்தது. அதனால் மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மாணவர்களின் குரலைக் கேட்க வேண்டும். விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பழங்குடி மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காக்க வேண்டும்.
ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, நில வங்கி உருவாக்கி, பணக்காரர்களுக்கே கடனுதவி வழங்குகிறது''.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.